சஞ்சீவ பண்டாரநாயக்க அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்
இலங்கையில் வங்கி அல்லாத நிதியியல் சேவை நிறுவனங்களில் முன்னிலை வகித்து வருவதுடன், மக்கள் வங்கியின் துணை நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்ற பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, தனது புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளராக திரு. சஞ்சீவ பண்டாரநாயக்க அவர்களை நியமனம் செய்துள்ளமை குறித்து அறிவித்துள்ளது. 2024 ஆகஸ்ட் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதியும் இதற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
36 ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான அனுபவத்தைக் கொண்டுள்ள திரு. பண்டாரநாயக்க அவர்கள், குறிப்பாக 31 ஆண்டுகளாக வங்கி அல்லாத நிதியியல் நிறுவனங்கள் துறையில் அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2007 இல் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியில் நிதி மற்றும் நிர்வாகத் துறைக்கான பிரதிப் பொது முகாமையாளராக இணைந்த அவர், நிதி, திறைசேரி, நிர்வாகம், மனிதவளங்கள், தகவல் தொழில்நுட்பம், கடன் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட மூலோபாயச் செயல்பாடுகளை முன்னெடுப்பதில் தீவிரமாக உழைத்துள்ளார். அவரது மகத்தான தலைமைத்துவம் மற்றும் மூலோபாய வணிக நிபுணத்துவம் ஆகியன தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கி அல்லாத நிதியியல் சேவைகள் துறையில் சந்தையில் தலைமைத்துவ ஸ்தானத்தை இந்நிறுவனம் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன.
திரு. பண்டாரநாயக்க அவர்களின் தொழில்ரீதியான பயணமானது, மகத்துவத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் நிதியியல் சேவைகள் துறையில் பல்வகைப்பட்ட சாதனைகளை நிலைநாட்டியுள்ளன. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் கற்கைநிலையத்தின் (Institute of Chartered Accountants of Sri Lanka) அங்கத்தவரான அவர், அவுஸ்திரேலியா, அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் கற்கைநிலையம் (Institute of Certified Management Accountants of Australia) மற்றும் இலங்கை, அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் சங்கம் (Society of Certified Management Accountants of Sri Lanka) ஆகியவற்றின் அங்கத்தவராகவும் உள்ளார். மேலும், ஐக்கிய இராச்சியம், பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் கற்கைநிலையத்தின் (Chartered Institute of Management Accountants – UK)) இறுதி நிலையிலும் உள்ளார். அவரது நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், 2009, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்த மூன்று வெவ்வேறு நிதி நிறுவனங்களை மீட்டெடுத்து, மறுசீரமைப்பதற்குப் பொறுப்பான பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
ஒரு தசாப்தத்திற்கு மேலாக கடன் தகவல் பணியகத்தின் (CRIB) பணிப்பாளராக சேவையாற்றியுள்ள அவர், இரண்டு தடவைகள் குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் செயல்பட்டுள்ளார். நிதியில்லங்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார். அவரது விசாலமான பின்னணி மற்றும் நிரூபிக்கப்பட்ட தொழிற்பயணம் ஆகியன, அவர் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக பொறுப்பேற்கின்ற தருணத்தில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தில் அவரை மிகவும் பொருத்தமான ஒரு அதிகாரியாக மாற்றியுள்ளன. அந்த வகையில், இந்நியமனம், நிறுவனத்தின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தி, எதிர்கால வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்று, நிதியியல் சேவைகள் துறையில் மகத்துவத்தின் மீதான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தொடர்பான விபரங்கள்
இலங்கையில் அனுமதி உரிமம் பெற்ற, வங்கி அல்லாத நிதியியல் நிறுவனமாக இயங்கி வருகின்ற பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பிரத்தியேகமான நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் அதன் புத்தாக்கம் மற்றும் ஓயாத அர்ப்பணிப்பிற்கு பெயர்பெற்றுள்ளது. வலுவான அத்திவாரத்துடனும், பல்வகைப்பட்ட தீர்வுகள் மற்றும் சேவைகளுடனும், மகத்துவத்தின் மீதான அர்ப்பணிப்புடனும் நிதியியல் சேவைகள் துறையில் முன்னிலையாளராக பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி வளர்ச்சி கண்டுள்ளது. மக்கள் வங்கியின் துணை நிறுவனம் என்ற ரீதியில், இலங்கை மக்கள் மத்தியில் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்தி, நம்பிக்கை மிக்க மற்றும் நன்மதிப்புடைய நிதியியல் சேவைகள் வழங்குனராக, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தனது ஸ்தானத்தை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது.
சஞ்சீவ பண்டாரநாயக்க – பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளர், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி