களனி பல்கலைக்கழகத்தின் வணிகம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் வணிக மற்றும் நிதியியல் முகாமைத்துவ பிரிவின் பேராசிரியராக பேராசிரியர். சமரகோன் தற்போது சேவையாற்றுகின்றார். இவர், வணிக (விசேட) இளமாணி பட்டத்தை பெற்றுள்ளதுடன், மாஸ்டர்ஸ் கற்கையையும் பெற்றுள்ளார். மேலும், முகாமைத்துவம் மற்றும் பொருளியியலில் புலமைபட்டத்தை (PhD) செக் குடியரசின் Tomas Bata பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுள்ளார். அத்துடன், செக் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெருமைக்குரிய சர்வதேச அபிவிருத்தி புலமைப்பரிசிலையும் பெற்றுள்ளார்.
பேராசிரியர் சமரகோன் அனுபவம் வாய்ந்த கல்விசார் முன்னோடியாக திகழ்வதுடன், PhD பயிலும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், சர்வதேச மாநாடுகளுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளார். இவர் International Conference on Business and Industry (ICBI 2017) இன் இணை தலைமை அதிகாரியாக செயலாற்றியுள்ளார். இவரின் கல்வித் தகைமைகளுக்கு நிபுணத்துவ அமைப்புகளான CMA-அவுஸ்திரேலியா மற்றும் AAT இலங்கை ஆகியவற்றில் கொண்டுள்ள அவரின் அங்கத்துவங்கள் சான்றாக அமைந்துள்ளன.
கல்விசார் சாதனைகளுக்கு அப்பால், பேராசிரியர். சமரகோன் நிதியியல் மற்றும் கணக்காய்வு பிரிவுகளில் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ளார். மூன்று வருடங்களாக இவர் கணக்காய்வு மேற்பார்வையாளராக கடமையாற்றியுள்ளதுடன், நிதிசார் ஆளுகை மற்றும் செயற்பாட்டு மேற்பார்வை போன்றவற்றில் பெறுமதி வாய்ந்த நிபுணத்துவத்தையும் பெற்றுள்ளார். இலங்கையின் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பாடவிதான வடிவமைப்பில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். அதனூடாக நாட்டின் கல்விக் கட்டமைப்பிலும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. உயர் தர பரீட்சையின் பிரதான பரீட்சகராக திகழும் பேராசிரியர் சமரகோன், தேசிய மட்டத்தில் கல்வி நியமங்களை நிறுவுவதில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தர உறுதிப்படுத்தல் மற்றும் தரமளிப்பு சங்கத்தில் ஈடுபாட்டை பேணியிருந்ததனூடாக, உயர் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தவிசாளர் பேராசிரியர். சமரகோன், நிறுவனத்தை எதிர்காலத்தில் புத்தாக்கம், நிலைபேறாண்மை மற்றும் சிறப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வழிநடத்திச் செல்வதற்கு அவசியமான பெருமளவு அறிவு மற்றும் அனுபவத்தை கொண்டுள்ளார். அவரின் தலைமைத்துவத்தினூடாக, இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் துறையில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியை நம்பிக்கையை வென்ற முன்னோடியாக தொடர்ந்தும் திகழச் செய்யக்கூடியதாக இருக்கும்.
திரு. சனுர விஜேதிலக, வங்கிச் சேவைகள் முறையில் 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டவர். இதில் 14 ஆண்டுகள் கொமர்ஷல் பாங்க் ஒப் சிலோன் பி.எல்.சி.யில் சிரேஷட்ட முகாமைத்துவம் மற்றும் நிறுவன முகாமைத்துவம் தொடர்பாகப் பெறப்பட்ட அனுபவமாகும். கடன் வழங்கல், இணக்கப்பாடு மற்றும் கிளை நிர்வாகம் ஆகிய துறைகள் இதில் உள்ளடங்கியிருந்தன.
கடன் வழங்குதல் தொடர்பில் கிளை முகாமையாளர்கள் மற்றும் கடன் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சித் திட்டத்திற்கான வங்கியின் உள்ளக மூலவள அமைப்பின் அங்கத்தவராகவும் அவர் செயற்பட்டார்.
திரு. விஜேதிலக, இலங்கை வங்கியாளர்கள் நிலையத்தின் சக உறுப்பினராகவும் சர்வதேச நிபுணத்துவ முகாமையாளர்கள் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) என்ற அமைப்பின் இணை உறுப்பினராகவும் இருக்கின்றார். அவர் இந்தியாவின் ICFAI பல்கலைக்கழகத்திடமிருந்து முகாமைத்துவத் துறையில் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
கொமர்ஷல் பாங்க் ஒப் சிலோன் பி.எல்.சி.யில் நீண்ட காலம் சேவையாற்றிய அவர், வங்கியின் பிரதிநிதி என்ற முறையில், சிங்கப்பூர், பங்களாதேஷ;, சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பல பயிற்சித் திட்டங்களில் பங்குபற்றியுள்ளார்.
கொமர்ஷல் பாங்க் ஒப் சிலோன் பி.எல்.சி.யில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், திரு. விஜேதிலக சிறிது காலம் சொவ்ட்லொஜிக் ஃபினான்ஸ் பி.எல்.சி.யில் இணக்கப்பாட்டு உதவிப் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.
திரு. அசோக பண்டார, பல்தேசியக் கம்பனிகளிலும் பிரபல உள்நாட்டு நிறுவனங்களிலும் கிராக்கி உருவாக்கச் செயற்பாடு மற்றும் வியாபார அபிவிருத்தி நடவடிக்கைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டவர். நெஸ்லே லங்கா பி.எல்.சி.யின் MANCOM அங்கத்தவராகவும் டெல்மேஜ் ஃபோர்சித் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய அவர், தற்சமயம் பிரபல உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு முகாமைத்துவ ஆலோசனைச் சேவைகளை வழங்கும் அமைப்பு ஒன்றை நடத்துகின்றார். வர்த்தகச் சின்ன அடிப்படையிலான வியாபாரங்களைக் கட்டியெழுப்புதல் வணிக அணிகளை விருத்தி செய்தல் என்பன அவரது பிரதான நிபுணத்துவத் திறன்களில் உள்ளடங்கும். ஓர் ஆசிரியர் என்ற முறையில், அணி சார்ந்த தலைமைத்துவத்தை விருத்தி செய்தல் மற்றும் ஆளுமை அபிவிருத்தி ஆகிய விடயங்களில் விசேட கவனம் செலுத்துகின்றார். தலைமைத்துவம், மூலோபாய முகாமைத்துவம், முன்னேற்றகரமான சந்தைப்படுத்தல், விற்பனை முகாமைத்துவம் போன்ற MBA போதனைத்த தலைப்புக்களின் ஊடாக அவர் தனது அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். தனது பிரச்சினை முகாமைத்துவத் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் முன்னணித் தொழில் அமைப்புகளுக்கும் பங்காளிகளுக்கும் இடையிலான பேரப் பேச்சுகளில் அவர் முக்கிய பேச்சாளராகச் செயற்படுகின்றார்.
திரு. கிளைவ் பொன்சேகா, இலங்கை வங்கியாளர்கள் நிலையத்தின் சக உறுப்பினராக இருப்பதுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிலையத்திடமிருந்து வியாபார நிர்வாகத் துறையில் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். ACI கொடுக்கல் வாங்கல் சான்றிதழுக்கான பரீட்சையில் அதிவிசேட தகைமையைப் பெற்ற அவர், திறைசேரி முகாமைத்துவத்தில் 26 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் அவுஸ்திரேலிய சான்றிதழ் பெற்ற முகாமைத்துவநிலையத்தின் சான்றிதழ் பெற்ற அங்கத்துவரும் (CMA) ஆவார். 2018 ஜூலை மாதம் முதனிலைப் பங்கு வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் இன்று வரை அப் பதவியை வகிக்கின்றார். அவர் இலங்கை மத்திய வங்கியின் தேசிய கொடுப்பனவு மன்றம் மற்றும் நிதி அமைப்பு உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுக்களின் அங்கத்தவராகவும் இருக்கிறார். அத்துடன், இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் IABF/DABF பரீட்சைகளுக்கான பிரதம பரீட்சகராகவும் செயற்பட்டுள்ளார்.
திரு. கிளைவ் பொன்சேகா, 2002ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் இணைந்தார். அதற்கு முன் அவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஸ்டான்டர்ட் சாட்டர்ட் வங்கி ஆகியவற்றில் கடமையாற்றினார். 2011 நவம்பர் மாத த்திலிருந்து அவர் மக்கள் வங்கியின் சிரேஷ;ட நிறுவன முகாமைத்துவ அணியின் அங்கத்தவர்களில் ஒருவராக செயற்படுகின்றார்.
ஜனாப் அஹ்மத் 2017 ஜனவரி 3ஆம் திகதி மக்கள் வங்கியில் நிதிப் பிரதானியாக இணைந்தார்.
அவர் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் மூலோபாய நிதி முகாமைத்துவம், மாற்றுவழி முதலீடுகள், இடர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சுமார் 18 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட சந்தைகளில் மிகப் பெரிய பல்தேசிய நிபுணத்துவச் சேவை நிறுவனங்களிலும் அடுக்கு 1ஐ சேர்ந்த ஏனைய சேவை வழங்கும் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ள அவர் முகாமைத்துவக் கணக்காளர்களின் பட்டய நிலையம் (ஐக்கிய இராச்சியம்), பட்டயச் சான்றிதழ் பெற்ற கணக்காளர்கள் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) இலங்கை சான்றிதழ் பெற்ற முகாமைத்துவக் கணக்காளர்கள் நிலையம் ஆகியவற்றின் சக உறுப்பினராக இருக்கின்றார். ஐக்கிய இராச்சிய இடர் முகாமைத்துவ நிலையத்தின் தொழில்நுட்ப நிபுணர், அவுஸ்திரேலியாவின் சான்றிதழ் பெற்ற தொழிற்படு கணக்காளர் ஆகிய தகைமைகளையும் பெற்றுள்ள அவர், பிணையங்கள் மற்றும் முதலீடுகள் பட்டய நிலையம் (ஐக்கிய இராச்சியம்) என்ற அமைப்பிலும் அங்கம் வகிக்கிறார்.
திரு. ரோஹான் பத்திரகே 2020 ஜூலை 07ஆம் திகதி சபைப் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். சட்டத்தரணியான திரு. பத்திரகே கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து சட்டத்துறைப் பட்டத்தையும் நியூசிலாந்து மஸே பல்கலைக்கழகத்திடமிருந்து வங்கி முகாமைத்துவத் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். வங்கியியலில் பட்டப்படிப்பு டிப்ளோமா ஒன்றையும் அவர் வைத்திருக்கின்றார்.
மக்கள் வங்கியுடன் தொடர்புடைய மனித வளங்கள் சட்டம் மற்றும் முகாமைத்துவத் துறைகளில் அவர் 24 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் என்ற முறையிலும் பணிப்பாளர்கள் சபையின் செயலாளர் என்ற முறையிலும் 2010 ஓகஸ்ட் முதல் 2019 மார்ச் வரை கடமையாற்றிய திரு. பத்திரகே வங்கியின் பணிப்பாளர்கள் சபை மற்றும் அதன் பல்வேறு உப குழுக்கள் தொடர்பான சகல விடயங்களிலும் நிர்வாக உதவியை வழங்கினார். மக்கள் வங்கிப் பணிப்பாளர்கள் சபையின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் அவர் வங்கியின் நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கினை வகித்தார்.
திரு. பத்திரகே தற்சமயம் மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளராக (மனித வளங்கள் மற்றும் சட்டத்துறை) கடமையாற்றுகின்றார். அவர் இந்தப் பதவியின் பிரகாரம் வங்கியின் 10000க்கு மேற்பட்ட ஊழியர்களை மேற்பார்வை செய்வதுடன் வங்கியின் மனித வள தேவைகளுக்கு அமைவாக அதன் சிரேஷ்ட நிறைவேற்று அலுவலர்களின் நியமனங்களையும் முகாமைத்துவம் செய்கின்றார். அத்துடன் வங்கியின் 70 அங்கத்தவர்களைக் கொண்ட சட்டத்துறை அணிக்கும் அவர் தலைமை தாங்குகின்றார். பீப்பள்ஸ் லீசிங் ஹவ்வொக் புரப்பட்டீஸ் லிமிட்டட் தலைவர் பீப்பள்ஸ் மைக்ரோ கொமர்ஸ் லிமிட்டட் பணிப்பாளர் லங்கன் அலையன்ஸ் ஃபினான்ஸ் லிமிட்டட் பங்களாதேஷ பணிப்பாளர் ஆகிய பதவிகளையும் அவர் வகிக்கின்றார்.
திரு. கொடித்துவக்கு கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து நிதித் துறை சார்ந்த வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் ஐக்கிய இராச்சியம் நியூ பக்கிங்ஹாம்ஷயர் பல்கலைக்கழகத்திடமிருந்து சட்டத்துறை (சிறப்பு) கலைமாணிப் பட்டத்தையும் பெற்றிருப்பதுடன் இலங்கை வங்கியாளர்கள் நிலையத்தின் இணை அங்கத்தவர்களில் ஒருவராகவும் இருக்கின்றார்.
2020 ஜூன் 19 முதல் அவர் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகார பொது முகாமையாளர் என்ற பதவியை வகித்து வருகின்றார். 1982ஆம் ஆண்டு வங்கியில் தனது தொழிற் பயணத்தை ஆரம்பித்த திரு. கொடித்துவக்கு கிளை வங்கிச் சேவை வாடிக்கையாளர் வங்கிச் சேவை வணிக வங்கிச் சேவை நிறுவன வங்கிச் சேவை கடல்கடந்த வங்கிச் சேவை சர்வதேச வங்கிச் சேவை வேலைத்திட்ட நிதியிடல் மீட்புகள் டிஜிட்டல்மயமாக்கம் போன்ற பல்வேறு துறைகளில் விசேடத்துவமான சேவைகளைப் புரிந்துள்ளார். வெவ்வேறு புவியியல் பிரதேசங்களில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றியதன் மூலம் அவர் விரிவான முறையில் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயிற்சியை அனுபவத்தை பெற்றுள்ளார்.
தொழிற்றுறையில் மிகச் சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் வியாபாரச் செயற்பாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதன் மூலமும் வியாபாரத் தேவைகளுக்கென டிஜிட்டல் தளம் ஒன்றை ஏற்படுத்தி டிஜிட்டல்மயமாக்கலுக்கு வங்கியை வழிநடத்துவதில் அவர் முக்கிய பங்கினை வகித்தார். இதற்காக சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் அநேக விருதுகளும் பாராட்டுதல்களும் வங்கிக்குக் கிடைத்தன.
அது மட்டுமன்றி 2009ஆம் ஆண்டு வட பிராந்தியத்தில் மனிதாபிமான நடவடிக்கை முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப் பிரதேச மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடனும்; பிரதேச பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நோக்கத்துடனும் வங்கியின் கிளைகளை மீண்டும் திறப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளில் திரு. கொடித்துவக்கு பெரும் பங்கினை வகித்தார்.
திரு. கொடித்துவக்கு பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பி.எல்.சி. பீப்பள்ஸ் ட்ரவல்ஸ் லிமிட்டட் லங்கா அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் பங்களாதேஷ் நிதி ஒம்புட்ஸ்மேன் இலங்கை (உத்தரவாதம்) லிமிடெட் இலங்கைக் கொடுகடன் தகவல் பணியகம் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிட்டட் தேசிய கொடுப்பனவுகள் மன்றம் இலங்கை வங்கிகள் சங்கம் (உத்தரவாத) லிமிட்டட் லங்கா நிதிச் சேவைகள் பணியம் இலங்கை வங்கியாளர்கள் நிலையம் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் இருக்கின்றார்.