திரு. பிரதீப் அமிர்தநாயகம் பீப்பள்ஸ் லீசிங் தலைவராக நியமிக்கப்பட்டார்
செப்டெம்பர் 12 முதல் அமுலுக்கு வரும் வகையில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக திரு. பிரதீப் அமிர்தநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 15, 2022 அன்று, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி வாரியத்தின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் அவர் பீப்பள்ஸ் லீசிங் சபையில் 2015-2019 வரை பிரதித் தலைவராகவும் 2019/2020 இல் குறுகிய காலத்திற்கு தலைவராகவும் பணியாற்றினார்.
பங்களாதேஷில் அமைந்துள்ள லங்கன் அலையன்ஸ் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
திரு.அமிர்தநாயகம், பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (பிரித்தானியா) உறுப்பினராகவும், பேச்சு மற்றும் நாடகத்தில் பிரித்தானிய திரித்துவ இசைக் கல்லூரியின் இணை உறுப்பினராகவும் உள்ளார். அமிர்தநாயகம் ஊடகத்துறையிலும் ஈடுபாட்டைக் கொண்டவர். ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகிய ஊடக வலையமைப்புகளில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு நேர்காணல் செய்பவராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயற்பட்டுள்ளார். லண்டனில் உள்ள பிபிசியின் தலைமையகமான “புஷ் ஹவுஸ்”இல் பயிற்சி பெற்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அவர் கொழும்பு மேற்கு ரொட்டரி கழகத்தின் 50ஆவது தலைவராக இருந்ததோடு, 2012 இல் “ஆண்டின் சிறந்த ரோட்டரியன்” விருதைப் பெற்றார். அவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் முன்னேற்றம் மற்றும் மறுவாழ்வுக்கான சங்கத்தின் (SUROL) துணைத் தலைவராக உள்ளார். அனுர பண்டாரநாயக்க அறக்கட்டளையின் பணிப்பாளராகவும் செயற்படுகின்றார்.
திரு. அமிர்தநாயகம் பீப்பள்ஸ் லீசிங்கின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக நியமிக்கப்பட்டதுடன், திரு. சுஜீவ ராஜபக்ச முன்னதாக இந்த பதவியை வகித்தார். பீப்பள்ஸ் லீசிங் பணிப்பாளர் சபை, திரு. ஆர். பத்திரகே, திரு. கே.சி.ஜே.சி. பொன்சேகா, திரு. ஏ.ஏ. அஹமட், திரு. சி.ஜே.விஜேதிலக்க, திரு. யூ.எல்.ஏ.டபிள்யூ. பண்டார, திருமதி. எம்.சி. பீட்டர்ஸ், மற்றும் திரு. ஆர். கொடிதுவாக்கு ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் என்பது இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும். 1996 ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த பீப்பள்ஸ் லீசிங், 2011 ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.