PLC அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான டிஜிட்டல் முயற்சிகள்: இலங்கையில் நிதித்துறையில் நிலைபேற்றியல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் முன்னோடியாக eDoc மற்றும் eReceipts


வங்கிச்சேவை அல்லாத நிதியியல் சேவைகளை வழங்குவதில் இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (People’s Leasing & Finance PLC – PLC), தனது வலையமைப்பு மட்டத்தில் PLC eDoc மற்றும் PLC eReceipts ஆகிய இரண்டு டிஜிட்டல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளமை தொடர்பில் அண்மையில் அறிவித்துள்ளது. தனது டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் PLC முன்னெடுத்து வைத்துள்ள மற்றுமொரு பாரிய நகர்வாக இக்கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை அதிகரிக்கும் அதேவேளையில், தனது காபன் அடிச்சுவட்டைக் குறைக்கும் முக்கிய இலக்குடன் ஒத்திசையும் வகையில், நிலைபேற்றியல் மீது PLC இன் அர்ப்பணிப்பை இது மேலும் ஆணித்தரமாக உறுதிப்படுத்தியுள்ளது. eDoc மற்றும் eReceipt ஆகியவற்றின் ஒட்டுமொத்த தீர்வும், PLC இன் உள்ளக மென்பொருள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மேம்பாட்டு அணியால் வடிவமைக்கப்பட்டு, வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்பவியல் புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் செயல்படுத்தல் ஆகியவற்றில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது காண்பிக்கின்றது.                

அந்தவகையில், செயல்பாடுகளை சீரமைத்து, காகித பயன்பாட்டை குறைப்பதில் ஒரு சாதனையாக PLC eDoc காணப்படுகின்றது. புரட்சிகரமாக இத்தீர்வானது இலத்திரனியல் முறையில் ஆவணங்கள் அனைத்தையும் தங்குதடையின்றி அடையப்பெற்று, நிர்வகிப்பதற்கான ஒரு மத்திய நுழைமுகத்தினை வாடிக்கையாளர்களுக்கும், வணிகத்திற்கும் வழங்குகின்றது. பாரம்பரியமான ரசீதுகள், குறுந்தகவல் (SMS) தொடர்பாடல்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான கடித தொடர்புகள் என பல்வகைப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி, பாவனைக்கு மிகவும் இலகுவான தளத்தில் PLC eDoc வழங்குகின்றது.   

இந்த டிஜிட்டல் தளத்திற்கு இணையாக, PLC eReceipts ஆனது பாரம்பரியமான காகித ரசீதுகளுக்குப் பதிலாக, அதிநவீன தீர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. குறுந்தகவல் (SMS) செய்திகள் மற்றும் தனித்துவமான இணைய URLs மூலமாக டிஜிட்டல் வழிமுறையில் அவற்றை வழங்கும் PLC eReceipts, எங்கேயும், எப்போதும் பரிவர்த்தனைகளின் விபரங்களை உடனடியாக அறியப்பெறுவதை உறுதி செய்கின்றது. பௌதிக பிரதிகளின் தேவையைப் போக்கி, காகித கழிவைக் குறைத்து, வாடிக்கையாளர்கள் தமது டிஜிட்டல் ரசீதுகளை தரவிறக்கம் செய்து, சௌகரியமாக பகிர்ந்துகொள்ளவும் முடியும்.       

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளரான பிரபாத் குணசேன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இந்த டிஜிட்டல் தீர்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ளமை நிலைபேணத்தகு மற்றும் பசுமையான எதிர்காலத்தைத் தோற்றுவிப்பதில் எமது ஆழமான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது. அவ்வாறாக, eDoc மற்றும் eReceipts ஆகியவற்றின் அறிமுகம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் சூழல்நேயத்தை முன்னின்று நிலைநாட்டுதல் ஆகியவற்றில் எமது ஓயாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.   

கைமுறையான ஆவணங்களை டிஜிட்டமல்மயப்படுத்தி, காகிதப் பயன்பாடின்றிய தொழிற்பாடுகளை உள்வாங்குவதன் மூலமாக செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் அதேசமயம், தனது நிலைபேறாண்மை இலக்குகளை வலுப்படுத்தும் இரட்டை நோக்கத்தை PLC அடைந்துவருகின்றது. திறன்மிக்க டிஜிட்டல் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலமாக, இலங்கையில் வங்கிச்சேவை அல்லாத நிதியியல் சேவைகள் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் தனது தலைமைத்துவ ஸ்தானத்தை PLC காண்பித்து வருகின்றது.